Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - FIR (Sorry Review)


டிஸ்கி 1: உள்ளே "நிறைய" விஷயங்கள் சொல்ல போகிறேன். அதனால் படம் பார்க்கும் ஆவல் இருந்தாலும் படித்துவிட்டு பாருங்க.


டிஸ்கி 2: நீங்க ஏற்கனவே விஜய் படம் நிறைய பாத்திருந்தீர்கள் என்றால் இந்த விமர்சனம் எல்லாவற்றையும் நினைவுப்படுத்தும். இது தான் இந்த விமர்சனத்துக்கு ஸ்பாயிலர்.



எச்சரிக்கை: படத்தின் இடையே சாதா டீ/காபி வாங்கிக் குடித்தாலும் மசாலா டீ/காபி சாப்பிட்ட உணர்வு வருவதை தவிர்க்க முடியாது.



இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்டைக்காரன்.



முதலில் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்வே பிளாட்பாரத்தில் ஒருவர் ஜோல்னா பையுடன் இறங்கி வருகிறார். பிச்சைக்காரன் தட்டை எல்லாம் குடி போதையில் உதைக்கிறார். சரி இவர் தான் வில்லன் என்று நீங்க நினைத்தீர்கள் என்றால், அங்கே தான் டிவிஸ்ட் இருக்கு. ரயில் உள்ளே ஏறுகிறார். அங்கே ரவுடி, ஆள் கடத்தல் எல்லாம் இருக்கு. உடனே இவர் ஜோல்னா பையிலிருந்து துப்பாக்கி எடுத்து அந்த ரவுடியை சுடுகிறார். இவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவராஜ் ஐபிஎஸ்(ஸ்ரீஹரி).

அடுத்து தூத்துக்குடியில் இந்த தேவராஜ் கட்டவுட் இருக்கு. எதற்கு என்று போஸ்ட் மேன் விசாரிக்க. அந்த கட்டவுட் வைத்தது விஜய். (நம்ம ஒரிஜினல் ஹீரோ)

இவரை மாதிரி என்கவுண்டர் போலீஸாக விரும்புவது தான் விஜய்யின் லட்சியம். இதுக்கு ஒரு உதாரணம். ஊருக்குள் ஒரு போலீஸ் யாரையோ ஏழையை இடித்துவிட உடனே விஜய் அந்த ஜீப்பை வயலில் எல்லாம் துரத்தி துரத்தி பிடிக்கிறார். திடீர் என்று அங்கே ஒரு குதிரை வருது. அதில் ஏறி துரத்துகிறார். தலையில் கிளிண்ட் ஈஸ்ட் உட் கேப்புடன். போலீஸை அடிக்கும் முன் ஒரு நீட்டமான கல்லை எல்லாம் உடைத்து(அந்த சாதாரண போலீஸுக்கு அது தேவையே இல்லை) தன் வீரத்தை காண்பித்து பிறகு அந்த போலீஸிடம் பணம் ( காமெடியாக) வாங்கி அடிப்பட்ட ஏழைக்கு உதவுகிறார். அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன் இங்கே ஒரு பாட்டு இருக்கு.

அதுல ஆலமர பள்ளிக்கூடத்தை ஆக்ஸ்போர்ட் ஆக்கறேன் என்கிறார்.

இப்ப விஜய் இந்த மாதிரி ஊதாரி தனமாக சுற்றும் போது ( அதாவது போலீஸ் ரவியாக ) எந்த சினிமா அப்பா அம்மாவுக்கு தான் கோபம் வராது? டில்லி கணேஷ் அப்பா. அப்பறம் கொஞ்சம் புதுசா ஒரு அம்மா வருகிறார். வந்து மகனுக்கு அறிவுரை. அதுக்கு விஜய் செய்யும் காமெடி என்று படம் நகர்ந்து கொண்டு இருக்கு. விஜய் தன் நண்பர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா? இருக்கவே இருக்கு. நண்பருக்கு அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.

உடனே விஜய் அம்மா உனக்கு எப்படா திருமணம் என்று கேட்டவுடன் விஜய் ’எனக்கு என்று ஒருவர் இந்த உலகத்தில் பிறக்காமலா போய்விடுவார்’ என்று சொன்னவுடன் - இதை வேற நான் சொல்லணுமா? அதே தான். ஸ்லோ மோஷனில் அனுஷ்கா தலையை கோதிவிட்டுக்கொண்டு ரயில் ஏற புறப்படுகிறார். நம் எதிரே யாராவது அது மாதிரி வந்தால் அந்த பொண்ணை பார்த்துக்கொண்டு மற்றவர்களை தான் இடிப்போம் ஆனால் படத்தில் ஹீரோ அப்படி செய்யலாமா? (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்து ஹீரோயினை பார்த்து பாடல் காட்சியை தவிர ) வழியக்கூடாது. மற்றவர்களை பார்த்து கொண்டு இவரை அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி தோளில் இடிக்கிறார். உடனே கீழே விழுந்ததை, சத்த்துகுடிங்க ( ஏன் சாத்துகுடி ? ஊர் தூத்துக்குடி அதனால) எல்லாம் பொறுக்கும் போது என்ன வரும் காதல் தான் (நமக்கு பெருமூச்சு).
இப்படி ஒவ்வொன்றாக நான் விளக்கிகொண்டு இருக்க முடியாது. நீங்களா இனிமே புரிஞ்சிக்கணும்.

இப்ப திரும்பவும் விஜய். மீண்டும் அந்த ரோல் மாடல் போலீஸாக ஆகும் படலம். அந்த தேவராஜ் +2வில் 4 முறை கோட்டு அடித்திருப்பார். இவரும் அதே மாதிரி. அவர் படிப்புக்கு ஆட்டோ ஓட்டு ஃபீஸ் கட்டினாராம். இவரும் அதே மாதிரி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்து... அவர் படித்த அதே காலெஜில் - இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டியிருக்குமே! இதில பாட்ஷா மாதிரி மஞ்சள் கலர் ஆட்டோ, மஞ்சள் கலர் கர்சீப் எல்லாம். இதற்குள் விஜய் படித்துவரும் காலேஜில் ரவுடிகள் கொலை நடக்க போலீஸாக வரும் ஷாயாஜி ஷிண்டே அதை கண்டுக்கொள்ளாமல் போகிறார். அதனால இவர் கெட்ட போலீஸ். கதை இப்ப தான் பில்டப் ஆகிறது.

காலேஜ் தோழனாக சின்னிஜெயந்துக்கு வயசான காரணத்தால் வேறு ஒருவரை பிடித்திருக்கிறார்கள். இவர் காமெடி செய்ய ஸ்கோப் இல்லாத காரணத்தால் இவர் ஹேர் ஸ்டைல், கிருதா எல்லாம் கோணா மாணா என்று வெட்டி காமெடி செய்திருக்கிறார்கள்.

பாபிலோனின் தொங்கு தோட்டமும் மாதிரி தலை மயிர் வைத்துக்கொண்டு முகத்தில் நிறைய வெட்டுக் காயங்களுடன் இருந்தால் அவர் யார்? நூறு மார்க் உங்களுக்கு. சரியா கண்டு பிடிச்சீங்க. அவர் தான் படத்தின் ரவுடி வில்லன். செல்லா.

இதுக்கு முன்னாடி ஒரு பாட்டு வந்துவிட்டது அதை சொல்ல மறந்துவிட்டேன். பில்லா படத்தில் நயன் பில்லா என்ற டாட்டுவுடன் வருவாரே அதே மாதிரி இதில அனுஷ்கா இடுப்பில் வேற ஏதோ டாட்டுவுடன் வருகிறார். என்ன என்று படிப்பதற்குள் போய்விட்டது. இப்ப எடிட்டிங் எப்படி என்று தெரிந்திருக்கணுமே ?

அதுக்குள்ள பெண் காலேஜ் ஸ்டூடண்டை இந்த செல்லா ரவுடி வீட்டுக்கு கூப்பிட நம்ம விஜய் என்ன செய்வார் உடனே பொங்கி எழுகிறார். அவர் இருக்கும் பேட்டைக்கு தனி ஆளாக போய் அவரின் அடியாட்கள் ஒவ்வொருவராக வர அவர்களை தும்சம் பண்ணிவிட்டு கடைசில் இந்த ரவுடியையும் அடித்து சாத்துகிறார். அவர் அடித்து தும்சம் பண்ணிய இடத்தில் சுனாமி வந்தால் கூட அவ்வளவு அழிவு வந்திருக்காது. அவ்வளவு அழிவு ஏற்படுத்துகிறார் விஜய். மீயூசிக் கேட்கவா வேண்டும் கொடுத்த காசுக்கு விஜய் ஆண்டனி தன் பங்கிற்கு வில்லன்களை டிரம்ஸால் அடித்து சாத்துகிறார். அவர் அடித்த அடியில் எனக்கு உச்சாவே வந்துவிட்டது.

இங்கே இடைவேளி என்று நினைத்தால், அது தான் இல்லை. விஜயை உடனே போலீஸ் அள்ளிக்கிட்டு போய் என்ன செய்யும்? ஒரு தூசி அதிகமாக இருக்கும் ரூமில் மரசேரில் உட்கார வைத்து கையை கட்டி போட்டு அடிக்கிறது. இப்ப என்ன செய்வார் ஹீரோ 100 ஹார்ஸ் பவர் தீடீர் என்று வந்து சேரை உடைத்து வெளியே வருவார். தூசி பறக்கும் எதுக்கு தூசி உள்ள ரூம் என்று புரிந்திருக்குமே? சரி படத்தில் இது வருகிறது. ஆனால் அங்கே தான் டைரக்டர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். உடைத்து வெளியே வரும் விஜயை திரும்பவும் போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். உடனே அவரை என்கவுண்டரில் போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். அவரை எங்கோ காட்டுப்பகுதியில் அழைத்துக்கொண்டு போக, அங்கே விஜய் தப்பிக்கிறார். உடனே அவரை போலீஸ் துரத்துகிறார்கள், இவர் ஓட, போலீஸ் துரத்த கடைசியில் எங்கே போய் நிற்பார்? தெருவில் துரத்தினால் முட்டுச்சந்தில் போய் நிற்கணும், காட்டில் துரத்தினால் கடைசியில் அருவியின் தலையில் போய் நிற்கணும் இப்ப என்ன நடக்கும் ? இரண்டு பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு காயங்களுடன் ஹீரோ அருவியிலிருந்து குதிக்கிறார். அதை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள். கேமரா சூப்பர். போதுமா? இப்ப கீழே போகலாம்.

கீழே போன ஹீரோ குளத்திலிருந்து குளித்து எழுதிருப்பது மாதிரி எழுதவுடன் என்ன ஆச்சரியம், (!) முகத்தில் ஒரு காயம் கூட இல்லை!! ஃபிரஷாக இருக்கார். மேக்கப்பை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.

தப்பித்த விஜய் நேராக தேவராஜ் வீட்டுக்கு போகிறார். அங்கே விஜக்கு அவர் ஹெல்ப் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். ஏன் என்று விஜய் கொதிக்க என்ன உடனே ஃபிளாஷ் பேக் தான். இது கூட நான் சொல்லணுமா. இங்கேயும் ஒரு டிவிஸ்ட் இருக்கு.
ஃபிளாஷ்பேக்கில் தேவராஜனுடைய மனைவி மக்கள் எல்லாம் கிளோஸ். இவர் கண்களும் போய்விடுகிறது என்பது மற்றொரு டிவிஸ்ட். அடுத்த டிவிஸ்ட் தேவராஜன் தான் விஜயை போலீஸிலிருந்து காப்பாத்தினார் என்ற டிவிஸ்ட் கூட இருக்கு. எப்படி என்று நீங்களே தியேட்டர் போய் பாருங்க.

உடனே பாட்ஷாவில் ரஜினி ஜனகராஜ், மற்றும் சிலருடன் வருவது போல கூட்டணி அமைத்துக்கொண்டு வில்லனை அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.அப்போது தான் படத்தில் இன்னொரு டிவிஸ்ட் இருக்கு. செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பணக்கார ரவுடி. அதாவது ஜிப்பா போட்ட ரவுடி. இவரை விஜய் போய் மீட் பண்ணுகிறார். அவரும் தன்னுடைய அருமை பெருமைகளை (அதாவது வண்டவாளங்களை) விஜய்க்கு விளக்குகிறார். அதில மக்களுக்கு என்மீது பயம் என்று அடிக்கடி சொல்லி அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய ரவுடி என்று பட்டம் என்று தான் வாழ்க்கையில் சாதித்த ரகசியத்தை கிட்டதட்ட ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி சொல்லுகிறார் விஜய் கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருந்தால் அதை வீடியோ எடுத்து சன் டிவியில் போட்டிருந்தால் சன் டிவிக்கும் ஏ.வி.எமுக்கும் இவ்வளவு செலவு இருந்திருக்காது.

விஜய் இந்த வில்லனுக்கு படிப்படியாக தன் மீது பயத்தை உண்டு பண்ணுகிறார். வில்லனுக்கும் இவருக்கும் போர் ஆரம்பிக்கிறது. விஜயின் நண்பரை வில்லன் கொல்ல உடனே வில்லனின் மகனை ( ரவுடி செல்லா ) கொல்ல இப்படி காமெடியாக போகிறது கதை.


மெயின் வில்லனுடன் சண்டை போட்டால் அப்பறம் கிளைமேக்ஸில் என்ன செய்ய முடியும் என்று நினைத்திருப்பார் இயக்குனர். உடனே இருக்கவே இருக்கு மதுரை அங்கிருந்து ஒரு ஆளை கொண்டு வந்துவிட்டார். அவர் வந்து விஜயின் காதலியை கிட்நாப் செய்ய விஜய் காதலியை மீட்டு கொண்டு வருகிறார் என்று நான் சொல்ல வேண்டுமா? அதை செய்து விட்டு பைக்கில் ஏற்றி ரோட்டில் வரும் போது காதலி எனக்கு ஒரு கிராமத்தில் சின்ன வீடு வேண்டும், குழந்தை, தோப்பு, அமைதியான வாழ்க்கை எல்லாம் வேண்டும் என்று நடந்த பரப்பரப்பு எதுவும் இல்லாமல் சொல்லுகிறார். இங்கே தான் மேலும் ஒரு டிவிஸ்ட் இருக்கு. இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிரே ஒரு லாரி வந்து இவர்களை மோதுகிறது. என்ன நடந்ததோ என்று நாம் பரபரக்க ஃபுல் மேக்கப்புடன் "என் உச்சி மண்டையில கிரி கிரி" என்று ஒரு பாட்டு. சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப செளக்கியமான திரைக்கதை.

இனிமே வேகமா சொல்லிடறேன். எனக்கே பொறுமை இல்லை. மக்கள் தன்னிடத்தில் பயப்படுவதில்லை என்று அமைச்சர் ஆக முயற்சி செய்கிறார் வேதநாயகம். ஆவதற்கு முன்பே அராஜகம் செய்கிறார். விஜய் இவர் இருக்கும் இடத்துக்கு வர முதல் சீனில் அடிவாங்கிய அடியாட்கள் திரும்பவும் கியூவில் வந்து அடிவாங்கிறார்கள். கடைசியில் வில்லனை அடிக்கும் முன் ஒரு டிவிஸ்ட் இருக்கு போலீஸ் வந்து விஜயை பிடிக்கிறார்கள். இன்னும் டிவிஸ்ட் இருக்கு. நம்ம பழைய தேவராஜ் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அவருக்கு தான் கண்தெரியாதே துப்பாகியுடன் அந்து வில்லனை சுடுகிறார். அது தானே நியாயம் ? பழிக்கு பழி.

விஜய் நமக்கு எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு போலீஸ் ஜீப்பில் போகிறார். உடனே சீட்டை விட்டு எழுதிருக்காதீர்கள், இருக்கு. விஜய் அடுத்து போலீஸ் டிரையினிங் கிரவுண்டில் இருக்கிறார். இங்கேயும் டிவிஸ்ட் இருக்கு. இவரை போலீஸ் ஆகும் படி தேவராஜ் வற்புறுத்துகிறார். ஆனால் விஜய் ஒத்துக்கொள்ளாமல் ( ஹேர் ஸ்டைல் போய்விடுமே ) எல்லோரிடத்திலும் உள்ளே ஒரு போலீஸ் இருக்கு என்று ஏதோ டையலாக் சொல்லிவிட்டு போகிறார். அவரை பார்த்து கண் தெரியாத தேவராஜ் சல்யூட் அடிக்கிறார். என்னை பார்த்து நீங்கள் எல்லாம் சல்யூட் அடிக்க கூடாது என்று விஜய் சொல்லிவிட்டு நகர கடைசி டிவிஸ்ட் நானும் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

சன் பிக்சர்ஸும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். டாட்டா சுமோ போகும் போது ரோட்டில் பறக்கும் கிழிந்த பேப்பர் கூட தினகரன்.

இதை தவிர படத்தில் பஞ்சமே இல்லாமல் பஞ்ச டயலாக் இருக்கு. சன் டிவி விளம்பரத்தில் அடிக்கடி போடுவதால் அதையும் இங்கே சொல்லி மேலும் நம் மக்களை இம்சிக்க விரும்பலைங்கண்ணா!!

கேமரா, எடிட்டிங் : இதற்கு ஸ்டில் போட்டோ கிராபராக இருந்திருப்பார் போல, அதனால் எல்லா இடத்திலும் ஸ்டில் பண்ணுவது எரிச்சல்.

இசை: இருக்கு, வெளியே வந்த பிறகு காது இருக்கா என்று எதுக்கும் செக் செய்துக்கொள்ளுகள்.

இட்லிவடை மார்க் - 4.5/10

என் சீட்டுக்கு பின்னாடி இவ்வளவு நேரம் இந்த படத்தை பார்த்த எங்களுக்கு தான் நீங்க சல்யூட் அடிக்க வேண்டும் என்று ஒருவர் ஏறக்குறைய கத்தினார்.

"குடும்பத்துடன்" பார்க்கலாம். எதுக்கு குடும்பத்துக்கு மஞ்சள் கலர் என்று கேட்கார்தீர்கள் :-)


Thanks : IdlyVadai

Free Projects Download :

Free Projects Download :
Free students projects download for all.

Popular Posts( Last 7 Days )